சேம் சைடு கோல்!

சேம் சைடு கோல்!
Published on

சோனியா காந்தி, சோனியா காந்தியிடம் ராஜினாமா கடிதம் கொடுக்க, சோனியா காந்தி,  சோனியா காந்தியை பதவியில் தொடரச் சொல்லி கேட்குக்கொண்டதால் சோனியா காந்தியே தொடர்கிறார். இதைப் போன்ற கொடூரமான நக்கல்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கிப் பாயும்வண்ணம் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்து முடிந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் சில நாட்களுக்கு முன்பாக காங்கிரசின் இடைக்காலத் தலைவராக இருக்கும் சோனியா காந்திக்கு கட்சி செயல்படாமல் இருக்கும் நிலை குறித்து வருத்தப்பட்டு கடிதம் எழுதினர். குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், கபில் சிபல் உள்ளிட்ட பெருந்தலைகள் எழுதிய கடிதம் அது.  செயல்படக்கூடிய நிலையிலான தலைமை தேவை என்றும் காங்கிரஸ் செயற்குழு, நாடாளுமன்றக் குழு ஆகியவற்றில் ஒழுங்கான விவாதங்கள் செயல்முறைகள் வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர்கள் கட்சியின் முன்னேற்றத்துக்கு பல ஆலோசனைகளும் கூறினர். ராகுல் காந்தி, சோனியாவை பாராட்டுவதுபோல் பாராட்டி இருந்தாலும் இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் ஆகியவற்றில் தேர்தல்கள் கொண்டுவந்ததால் பணமும் செல்வாக்கும் படைத்தவர்கள் கட்சிப்பொறுப்புகளை தேர்தல்மூலம் கைப்பற்றிக்கொண்டதாகவும் கூறினர். இது மறைமுகமாக ராகுல்காந்தி மீதான தாக்குதல்.

கட்சிக்குள் ராகுல்காந்தி தலைமையிலான இளம் அரசியல் பிரமுகர்களுக்கும் மூத்த தலைவர்களுக்கும் இடையில் உரசல் இருப்பது புதிய விஷயம் அல்ல. வாரிசுகளுக்கு சீட் கேட்டு பழந்தலைவர்கள் பண்ணும் ராவடியை ராகுல்காந்தி வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்.

இப்போதும்கூட கட்சித்தலைமையில் மாறுதல் வேண்டும் என்றபோது ராகுல் ஆதரவாளர்கள் ராகுல்காந்தியே மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று கருத்துகள் வெளியிட்டனர். பலர் சோனியா காந்தியை ஆதரித்து கருத்துகள் வெளியிட்டனர்.

தலைமையை விமர்சனம் செய்து, மாறுதல் வேண்டும் என்று கோரிய கடிதம் எப்படி செய்தித்தாள்களுக்கு லீக் செய்யப்பட்டது? இது உள்கட்சி

கூட்டங்களில்தானே விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டினர். ஹரியானா காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான செல்ஜா,'' மூத்த தலைவர்கள் கட்சியைக் காலிசெய்வதற்காக பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறார்கள்'' என்று விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இந்த கடிதம் பற்றி விவாதிக்கக் கூடியபோது, பாஜகவுடன் மூத்த காங் தலைவர்கள் வேண்டுமென்றே இணைந்து செயல்படுகிறார்கள் என்று ராகுல்காந்தி கூறியதாகக் கேள்விப்பட்ட கபில்சிபல் உடனே ட்விட்டரில் பதிலடி கொடுத்தார். பிறகு நான் அப்படிச் சொல்லவில்லையே என்று ராகுல் நேரடியாகப் பேசியபிறகே கபில் சிபல் அந்த ட்வீட்டை நீக்கினார்.

சோனியா காந்தி தான் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் அனைவரும் சேர்ந்து புதிய தலைவரை தெரிவு செய்வோம் என்று கருத்து தெரிவித்திருந்தார். ஆயினும் செயற்குழு கூட்டத்தில் புதிய தலைமை யார் என்று தீர்மானிக்கவோ அல்லது தேர்வு செய்வது பற்றிய நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை. இன்னும் ஆறு மாதங்களுக்கு சோனியாவே தொடருவார் என்று ஆதரவு தெரிவித்து முடித்துவிட்டார்கள்.

இப்படி எல்லாவற்றையும் தள்ளிப்போடுவதே அக்கட்சியின் செயல்பாடாக இருப்பதைப் பார்த்துவரும் அரசியல்நோக்கர்கள், ‘‘இப்படி கடிதங்கள் எழுதும் அளவுக்கு செயல்படாத தலைமை இருக்கிறது. இது நாட்டின் எதிர்

காலத்துக்கும் ஜனநாயகத்துக்கும் நல்லதே அல்ல. புதிய தலைமை தேர்வாகவேண்டும் என்றால் சோனியா அல்லவா முன்கூட்டியே  வழிகாட்டி இருக்கவேண்டும்?'' என்கிறார்கள். ‘‘காந்தி குடும்பத்துடன் இணக்கமாகப் போகும் ஒருவரையே தலைவராக்க விரும்புகிறார்கள். அப்படி ஒருவர் தலைமை ஏற்க சூழல் ஒருங்கும்போது புதிய தலைவர் வருவார்'' என்கிறார்கள் அவர்கள்.

இந்தியாவின் பழம்பெரும் கட்சி உள் கட்சி அரசியலால் தள்ளாடிக்கொண்டிருக்கிறது!

தமிழகத்தில் அதிமுகவில் மறுபடியும் பழைய சலசலப்புகள் தலையெடுக்க ஆரம்பித்துள்ளன.  ‘‘புதிய முதல்வர் யார் என்பதை எம்.எல்.ஏக்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்வார்கள்'' என்று சொல்லி வெடியைக் கொளுத்தி வீசினார் அமைச்சர் செல்லூர் ராஜு.

அதிமுக ஒரே கட்சியாக இருந்தாலும் எடப்பாடியாருக்கும் ஓ. பன்னீர் செல்வத்துக்கு இடையே நிலவும் பனிப்போர் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை எதிர்கொள்ள தனக்கென்று வியூக வகுப்பாளராக சுனில் என்பவரை நியமித்து பணிகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர். ஆனால் ஓபிஎஸ் தரப்பில் அமைதியாக இருந்தாலும் புகைச்சல் மண்டிக்கொண்டே வருகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிதான் மாநிலம் முழுவது சுற்றுப்பயணம்மேற்கொண்டு அனைத்து கூட்டணிக் கட்சியினருக்கும் ஆதரவு திரட்டினார். இதே வியூகம்தான் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அவர் செய்வார். இதன் மூலம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தன்னையே முன்னிலைப் படுத்திக்கொள்வார். தற்போதைக்கு எடப்பாடி பழனிச்சாமியின் சுறுசுறுப்பான செயல்பாடுகளால் அவரது கையே ஓங்கி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள். இதை பன்னீர் செல்வம் தரப்பு எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதும், சிறையில் இருந்து சசிகலாவின் விடுதலை இந்த ஆட்டத்தில் எப்படிப்பட்ட திருப்புமுனையை உருவாக்கும் என்பதும் பொருத்திருந்து பார்க்கவேண்டிய காட்சிகள்.

சமீபத்தில் முதல்வர் சர்ச்சைக்குப் பின் சுமார் பத்து அமைச்சர்கள் மாறிமாறி முதல்வரையும் துணை முதலமைச்சரையும் சந்தித்துப் பேசியது பிரச்னையின் தீவிரத்தைக் காட்டுகிறது. ‘‘மீண்டும் ஒரு தொடர் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும்'' என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டாலும் இரு அணிகள் சார்பிலும் ‘சேம் சைடு கோல்' போடும் ஆட்டம் தொடரவே செய்யும்.

தூரிகை  வி.மோகன்

பென்சில், பென் அண்ட் இங்க் ஆகியவற்றைப் பயன்படுத்தி வரையும் ஓவியங்களில் ஆழ்ந்து இயங்குகிறார் வி.மோகன். சென்னையில் உள்ள டாபே நிறுவனத்தில் பணியாற்றியவரான மோகன் கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் படித்தவர். விவசாய பின்னணி கொண்ட இவரது குடும்பத்தில் இவர்தான் முதல் ஓவியர்.  “சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் மீது ஏனோ ஆர்வம் துளிர்த்துவிட்டது, அதைப் பின் தொடர்ந்தேன்,” என்னும் இவர், தமிழகத்தின் கலாசார அடையாளங்களாக அமைந்த கோவில்கள், சிற்பங்கள் ஆகியவற்றை வரைவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். குறிப்பாக கோவில் கோபுரங்களில் இருக்கும் ஏராளமான கலை அம்சங்களை வரைவதில் கவனம் செலுத்துகிறார். நிறைய குழு கண்காட்சிகளிலும் பங்கேற்றுள்ளார். ”வேலைக்குப் போய்வந்து வரைவதில் அதற்கான நேரம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. அதுதான் பென் அண்ட் இங்க் வகை ஓவியங்களை வரைவதற்கு முக்கியக் காரணம். இந்த ஓவியங்களை சில நாட்களுக்குள் வரைந்துவிடலாம்!” என்கிற மோகனின் ஓவியங்கள் சில இங்கே இடம்பெறுகின்றன.

செப்டெம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com